திங்கள், 30 டிசம்பர், 2013

எதிர்பாரா விபத்தென்றுஏற்க முடியுமா இதனை?

பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வது, ஒப்பீட்டளவில் அது பாது காப்பானது என்பதற்காகவும்தான். அதனால்தான் பெரிய அளவில் ரயில் விபத்துகள் நடக்கிறபோது அது நாடு முழுவதுமே அதிர்ச்சியலைகளை ஏற் படுத்துகிறது. சனிக்கிழமையன்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகில் பெங்களூரு - நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அத்தகையதுதான். அதில் ஒரு குழந்தை உட்பட 26 பேர் உடல் கருகி மாண்டுவிட்டனர். பலர் பலத்த நெருப்புக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இழப் பீடுகளால் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட் டுள்ள இழப்பை ஈடுகட்டிவிட முடியாது.2013ம் ஆண்டில் 5 தீ விபத்துகளும், 3 பெரும்மோதல் விபத்துகளும், 43 தடம்புரண்டு கவிழ்ந்த விபத்துகளும் நடந்துள்ளன.

ஒவ்வொரு பெரியவிபத்தின்போதும் காரணங்களைக் கண்டறி வதற்கும் தடுப்பதற்கான வழிகளைப் பரிந் துரைப்பதற்கும் விசாரணைக்குழுக்கள் அமைக் கப்படுகின்றன. மக்களுக்குத் தெரியாமலே போவது என்னவென்றால், அந்தக் குழுக்கள் கண்டுபிடித்தது என்ன என்ற விவரங்கள்தான்.வண்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற அடிப்படையான பராமரிப்பு ஏற்பாட்டில் கூட நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். முன்பு பிரதான பரா மரிப்பு என்பது அன்றாட நடவடிக்கையாக இருந்தது. ஆனால், வண்டிகளின் இயக்கங்கள் பலதடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் போதுமான பெட்டிகள் உறுதிப்படுத்தப் படவில்லை.

இதனால் ஒரு தடத்தில் வந்த வண்டியே, பெயர்ப்பலகை மாற்றி வேறொரு தடத்தில் இயக்கப்படுகிறது. அன்றாடப் பராமரிப்பு ஏற்பாட்டைக் கைவிட்டு, ஒரு வண்டிமொத்தம் 4,500 கி.மீ. ஓடியபிறகு பராமரிப்பை மேற்கொண்டால் போதும் என்று முடிவு செய்துவிட் டார்கள். 12 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளப்பட்ட காலமுறைப்படியான ஒட்டுமொத்த பராமரிப்பு இப்போது 24 மாதங்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டது.ஒவ்வொரு வண்டிக்குமான தனி மின்சாரப் பணியாளர் கிடையாது. பொதுவாகவே ரயில் வேயில் பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே 1,49,000 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பாதுகாப்பு ஆய்வுக்குழுவே கூறியிருக்கிறது. அமைச்சகமோ 60,000 காலியிடங்கள்தான் இருப்ப தாகக் கூறி, பாதுகாப்பு தொடர்பான 25,000 பணியிடங்களை மட்டும் நிரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. ரயில்வேயில் இத்தனை பாது காப்புப் பணியிடங்கள் காலியாக இருப்பதையும், ஓராண்டுக்கு மேலாகிவிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. மின் கசிவால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உறுதியாகுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

ஆனால், பழுது ஏற்படுவதற்கு முன் பராமரிப்பு என்ற கொள்கையைக் கைவிட்டு, பழுது ஏற்பட்ட பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையைக் கொண்டுவந்ததற்கு யார் பொறுப்பு? ரயில்வே பணிகளைப் பாதுகாப்பு உத்தரவாதமற்ற தனியார் நிறு வனங்களிடம் ஒப்படைத்தது யாருடைய முடிவு? அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாத வரையில், இப்படிப்பட்ட சோகங்களை எப்படி எதிர்பாராத விபத்து என்று சொல்வது?
நன்றி தீக்கதிர் 30.12.2013

கருத்துகள் இல்லை: