வியாழன், 16 ஜனவரி, 2014

சுவரை இடித்துசித்திரம் வரைவதா?

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி யிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியபோது வரவிருக்கும் தேர்தலையொட்டி “கட்சிப் பணிகளைச் செய்வதற்காகவே” அவர் விடுவிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொண்டது. ஆனால், பல உள் நாட்டு - வெளி நாட்டுப் பெரு நிறுவனங்களின் தொழில் திட்டங்கள் சுற்றுச் சூழலுக்கு இடையூறு செய்வதாக இருப்பதால் அவற்றுக்கு அவர் அனுமதி வழங்காமல் இருந்ததால், அந்த நிறுவனங் கள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாகவே அவரிட மிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று ஊடகங்களில் ஊகச் செய்திகள் வந்தன.

அது உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, அவரைத் தொடர்ந்து பொறுப் பேற்றுக் கொண்ட எம். வீரப்ப மொய்லி தெரிவித் துள்ள தகவல்.அவர் இந்த அமைச்சகத்திற்குப் பொறுப் பேற்றபிறகு கடந்த ஒரு மாதத்திற்குள் ஒன் றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70க்குமேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறாராம். சட்டப்படி முறையான நடை முறைகள் முடி வடைந்த திட்டங்களுக்கான அனுமதி ஒரு நாள் கூட கிடப்பில் இருக்கக்கூடாது என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.குறிப்பிட்ட வட்டாரத்தின் தொழில் வளர்ச்சிக் கும், மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுகிற திட்டங்கள் முறைப்படி வேகமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நியாயமே. ஆனால், தற்போது இப்படி ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல்களின் நோக்கம் அதுதானா? ஒடிசா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சர்ச்சைக்குரிய தென் கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனத்தின் ரூ.52,000 கோடி இரும்புத் தொழிற்சாலைத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார் அமைச்சர். தங்களுடைய நிலத்தைப் பறித்து, பாரம்பரிய வேலைவாய்ப்புகளை சீர்குலைத்து, சுற்றுச் சூழ லையும் கெடுப்பதாக அந்த வட்டார மக்கள் - குறிப் பாகப் பழங்குடியினரும் தலித்துகளும் கடந்த ஏழுஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய அச்சம்போக்கப்படவில்லை, நிலத்தை இழப்போரின் மறுவாழ்வு திட்டவட்டமாக உறு திப்படுத்தப்படவில்லை.

போஸ்கோ நிறுவனம் “சமுதாயப் பொறுப்பு” நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 60 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது வெறும்கண்துடைப்பு ஏற்பாடாகவே முடியும் என்பது தான் கடந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கிடைத் திருக்கிற அனுபவப் பாடம்.அதே ஒடிசாவில், கிராமசபைகள் ஒப்புதல் அளிக்கும் வரையில் வேதாந்தா நிறுவனத்திற்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதைஏற்றுள்ள மத்திய அரசு போஸ்கோ உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு அதே விதியை ஏன் செயல்படுத்தவில்லை? முன்பு ஆறாண்டு காலம் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு இதே போல், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் புறக்கணித்து அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்ததுதான் நினைவுக்கு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையிலும், இந்த ஒப்புதல்களை அளிக்க அமைச்சரும் அரசும் இப்படி அவசரப்படுவது, இவர்களை ஆட்டுவிப்பது யார் என்ற உண்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நன்றி தீக்கதிர் 16.01.2014

கருத்துகள் இல்லை: