புதன், 9 ஏப்ரல், 2014

இளம் வாக்காளர்களுக்கு...



அன்புள்ள தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும், முதன்முதலாக நீங்கள் தேர்தலில் வாக்களிக்கவிருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி; உங்களைப் போலவே ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 90 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இணைந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவலைப் பார்த்து வியந்துபோனேன். வாக்களிப்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயக நடவடிக்கை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வாக்குதான். கோடீஸ்வரர் என்பதற்காக யாருக்கும் 10 வாக்குகள் கிடையாது. இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதுதான் இதன் பொருள். பாகுபாடுகள் நிறைந்த ஒரு நாட்டில், ஆங்கிலேய காலனி ஆட்சியில் மிக மோசமான பொருளாதாரச் சுரண்டலுக்கு உள்ளான இந்த தேசத்தில், அனைவரும் சமம் என்று சட்டபூர்வமாக ஆக்குவதே மிகப் பெரிய சவால்தான்.
நமது ஜனநாயகப் பண்பு
இன்று ஜனநாயகம் பற்றி சட்டாம்பிள்ளைத்தனமாகப் பல நாடுகளில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சக்திகள் தங்களது நாட்டில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட கருப்பினத்தினருக்கும் வாக்களிக்கும் உரிமையை எப்போது தந்தார்கள் என்று பார்த்தால்தான் நமது நாட்டுத் தலைவர்களின் ஜனநாயகப் பண்பைப் புரிந்துகொள்ள முடியும். எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையான ஜனநாயக மரபுகளின் மீது நமது தலைவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை பிழைகாண இயலாதது; மாற்றுக் கருத்தைச் சொல்வதற்கும், அந்தக் கருத்தை அரசியல்ரீதியாகப் பிரச்சாரம் செய்வதற்கும் யாருக்கும் உரிமை இருக்கிறது என்ற அடிப்படையான புரிதல்தான் மிக முக்கியமான அரசியல் நிறுவனங்களைக் கடந்த 67 ஆண்டுகளில் நம்மால் உறுதியாக நிறுவ முடிந்தது.
கல்வித் துறையின் பாராமுகம்
இது போன்ற அம்சங்களை வகுப்புகளில் பாடமாகப் படிக்கும் வாய்ப்பை நாம் பெறவில்லை. பொறுப்பான குடிமக்களாக, தங்களது ஜனநாயகக் கடமையை நன்கு உணர்ந்த மக்களாக இன்னமும் முழுமையாக நாம் மாறவில்லை என்பதில் கல்வித் துறைக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பாடத்திட்டத்தில் எதுவும் இருக்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. ஆனாலும், இனம்புரியாத உதாசீனம் வியாபித்திருப்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாதித் தலைவர்கள் பற்றிய வீரவழிபாடு, சகித்துக்கொள்ள முடியாத உயர்வு நவிற்சியோடும் பரவசத்தோடும் பேசப்படும் புராணக் கதைகள் என்று சாதிய அபிமானத்தையும் மத உணர்ச்சிகளையும் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் திணிக்கும் அரசுகளுக்கு நமது ஜனநாயகப் பயணம்குறித்தும் அதன் உண்மையான கதாநாயகர்கள்குறித்தும் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்ற சாதாரண பிரக்ஞைகூட எழாதது ஆச்சரியம்தான். நமக்கு ஜே.சி. குமரப்பாவைத் தெரியாது; மாபெரும் புரட்சியை நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிய ஜகன்நாதன்-கிருஷ்ணம்மாள் இணையரைத் தெரியாது; பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும், அப்பழுக்கற்ற லட்சியவாதிகளாக, மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பார்வதி கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களைத் தெரியாது.
அமெரிக்கக் கனவுதான் முக்கியமா?
இதைப் பற்றி நமது பாடப்புத்தகங்கள் கவலைப்படாததன் விளைவு, அரசியல் என்பது சாக்கடை; அதைப் பற்றிப் பேசுவது வீண்வேலை போன்ற பத்தாம்பசலித்தனமான சிந்தனை இக்கால மாணவர்களிடம் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு அதிகரித்துள்ளது. வாழ்க்கையின் இலக்கு, பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற ஆபத்தான போக்கு உங்களில் பலருக்குத் தாரக மந்திரமாகவே மாறிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் விஷயங்களில் ஒன்றாக அமெரிக்கா செல்வதும் ஆகிவிட்டதாக என் நண்பர் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார். சென்னையில் அமெரிக்கத் தூதரகத்தின் வாயிலில், விசா கிடைத்துவிட்ட உற்சாகத்தில் சில இளைஞர்களும் யுவதிகளும் போட்ட ஆர்ப்பாட்டத்தில், அருகில் இருந்த போக்குவரத்துக் காவலர் அரண்டுபோய் ஓடிவந்ததாகவும் பிறகு உண்மை நிலை தெரிந்து எரிச்சலோடு திரும்பியதாகவும் அதை நேரில் பார்த்த நண்பர் சொன்னார். இதுபோன்ற இளைஞர்களுக்குத்தான் இன்றைய அரசியல் அருவருப்பானதாகத் தெரிகிறது.
எதிர்காலம் உங்களுடையது
நமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பது நமது நிகழ்கால அரசியல்; ஆக, நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நிகழ்கால அரசியலை நீங்கள் கூர்ந்து அவதானிப்பதும் தீர்மானிப்பதும் மிகமிக அவசியம். ‘அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்’ என்று சொல்லப்பட்ட காலம் மாறி, இன்று முதல் புகலிடமாகவே மாறிவிட்டது என்று சோர்ந்துபோய் ஒதுங்கிச் செல்வது, குற்றப் பின்னணி உள்ளவர்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியலில் சேர வழிவகுத்துவிடும். தமிழகத்தின் ‘பெரிய’ கட்சிகளின் வட்டச் செயலாளர்களிலிருந்து மேல்மட்டத் தலைவர்கள் வரை செய்யும் அதகளங்களைக் கண்டு ஒட்டுமொத்த அரசியல் மீதே அருவருப்பு கொள்ள வேண்டாம். நோயுற்ற அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான் இது.
சிறப்பான நிர்வாகம்
இன்று இதை நிராகரிக்கவும் புதிய அரசியலை உருவாக்கவும் பெரும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; முதல்முறை வாக்களிக்க வரும் உங்களுக்கும் இருக்கிறது. இந்தியா போன்ற எண்ணிலடங்கா மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட நாட்டில், அதன் அடிப்படையான பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் தெரிந்த அரசியல் கட்சி அவசியம். ஒரே மொழி, ஒரே மதம் இருந்தால் மட்டுமே நாட்டில் ஒற்றுமை இருக்கும் என்ற அபத்தமான அரசியல் நிலைப்பாடு, சீரழிவை மட்டுமே உறுதி செய்யும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். சிறப்பான நிர்வாகம் என்ற சொல்லாடல் உங்களில் பலருக்குப் புல்லரிப்புகளை ஏற்படுத்தலாம். நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம்தான்; ஆனால், நவீன அரசியலைக் கூர்ந்து நோக்கினால், கடந்த நூறாண்டுகளில் சிறப்பாக நிர்வாகம் நடைபெற்ற நாடுகள் என்றால் அது ஹிட்லரின் ஜெர்மனி போன்ற ஒருசில நாடுகள்தான். ஆனால், அவற்றின் அழிவுகளை நினைத்தாலே மனம் பதறுகிறது. சிறப்பான நிர்வாகம் என்பது மக்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வதுதான். சில தனிநபர்கள் சில பெருமுதலாளிகளின் கைப்பாவையாகச் செயல்படும் நிர்வாகம் கண்டிப்பாகச் சீரழிவை மட்டுமே தரும்.
சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டு, கருத்தொற்றுமையின் அடிப்படையில் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் ஆளுமைகளை இனம்காண வேண்டும். தங்களுக்கென்று எந்த சொத்தும் இல்லாமல், பொதுவாழ்க்கையில் அசாதாரணமான அர்ப்பணிப்புடன் செயல்படும் மகத்தான தலைவர்கள் நம்மிடம் இன்றும் இருக்கிறார்கள்; இப்படியும் அரசியல் தலைவர்கள் இருந்தார்களா என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படும் அளவுக்குப் பல அப்பழுக்கற்ற மக்கள் தொண்டர்கள் அவர்கள். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி சிறை சென்றவர்கள், அதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயங்கள் தேடத் தெரியாதவர்கள் இன்றும் நம்மிடம் இருக்கிறார்கள். உங்கள் பாஷையில் சொன்னால்,
‘அரசியலில் பிழைக்கத் தெரியாதவர்கள்’.
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, தேச விடுதலைக்கு முன்னதாகவே லண்டனில் சட்டம் பயின்றவர், நாடு திரும்பியதும் தனது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்துவிட்டார்; அவரது சக சட்டக் கல்லூரி மாணவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானார். ஆனால், இந்தத் தமிழர் இறுதிவரை சமத்துவத்துக்காகப் பாடுபட்டார்; மிக மிக எளிமையான வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் சொற்பமானவர்களே கலந்துகொண்டனர் என்று அறிந்தபோது, எவ்வளவு மோசமான சீரழிவில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நமது அரசியல் உண்மையான மக்கள் தொண்டர்களைப் பின்தொடர்வதாக அமைய வேண்டும். அப்பழுக்கற்ற லட்சியவாதிகளின் தியாகங்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நீங்கள் உறுதி எடுங்கள். புதிய விடியலுக்கு வழிசெய்யும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கிறது. பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என்பது எனது அசையா நம்பிக்கை.
- இரா. திருநாவுக்கரசு, தமிழ்க் கலாச்சாரம் - சமூக அரசியல் ஆய்வாளர்

கருத்துகள் இல்லை: