புதன், 23 மார்ச், 2016

அரிமாக்களே, எழுங்கள்...தோழர் பகத்சிங் (1929 ஜூன் ‘கீர்த்தி’ இதழில் வெளியான பகத்சிங் கட்டுரை)







நம் நாடு உண்மையில் மிகவும் மோசமான வடிவத்தில் இருக்கிறது. இங்கே மிக விசித்திரமான கேள்விகள் எல்லாம் கேட்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது, நாட்டின் 30 கோடி மக்களில் ஆறில் ஒருபங்காகஇருக்கக்கூடியதீண்டத்தகாதவர்கள்பற்றியதாகும்.உதாரணமாக:தீண்டத்தகாதவர் ஒருவர் தொட்டுவிட்டால் தீட்டாகிவிட மாட்டோமா?தீண்டத்தகாதவர் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள்கள் கோபமடையாதா?பொதுக் கிணற்றிலிருந்து தீண்டத்தகாதவர்கள் தண்ணீர் இறைத்தால் அந்தத் தண்ணீர் முழுமையாக மாசு அடைந்து விடாதா? இத்தகைய கேள்விகள் 20ஆம் நூற்றாண்டிலும் கேட்கப்படுவதானது, நம் தலைகளை வெட்கத்தால் குனிய வைக்கின்றன. இந்தியர்களாகிய நாம், நம்முடைய ஆன்மீக வாழ்வு குறித்து ரொம்பவும்தான் பீற்றிக்கொள்கிறோம். ஆயினும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் நம்மைப் போன்ற ஒருவரே என்பதை ஏற்க நாம் மறுக்கிறோம்.
மேற்கத்திய மக்கள், காசில் குறியாக இருப்பவர்களாக இருந்தபோதிலும், மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை அவர்கள் அமெரிக்காவிலும், பிரான்சிலும் இவை அனைத்திற்கும் மேலாக ரஷ்யாவிலும் புரட்சிகள் நடைபெற்ற போது அவர்கள் மெய்ப்பித்துக் காட்டினார்கள். இந்நாட்களில் ரஷ்யா மக்கள் மத்தியில் நிலவிய அனைத்துவிதமான பாகுபாடுகளையும் துடைத்தெறிந்து விட்டது. அதன் மூலம் மே தினப் பிரகடனத்தில் கூறப்பட்ட கோட்பாடுகளை நிறைவேற்றியது.ஆனால் இந்தியர்களாகிய நாம், நம் கடவுள்களையோ அல்லது கடவுள் தன்மையையோ பீற்றிக் கொள்வதில் கொஞ்சம்கூட களைப்படைவதில்லை. மேலும் தீண்டத்தகாதவர்கள் பூணூ ல் அணியலாமா என்றும், வேதங்கள்/சாஸ்திரங்கள் படிக்கலாமா என்றும் மிகவும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பிற நாடுகளில் நாம் தரக்குறைவாக நடத்தப்படுவதாக - அதிலும் குறிப்பாக வெள்ளையர்கள் நம்மைத் தரக்குறைவாக நடத்திடும்போது - குறைபட்டுக்கொள்கிறோம்.அதே சமயத்தில், நாம் நம் சொந்தச் சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்?
பாட்னாவில் மாபெரும் இந்துக்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் மீது, மிகவும் நீண்டகாலமாகவே அனுதாபம் வைத்திருந்த லாலா லஜபதிராய் இம்மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். தீண்டத்தகாதவர்கள் பூணூல் அணிவதற்குத் தகுதியுடையவர்களா? அவர்கள் வேதங்கள்/சாஸ்திரங்கள் படிக்க முடியுமா? இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்ட சமயத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்த பலரால் இவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் நிலையை இழந்தார்கள். ஆனால் லாலாஜி மட்டும் பொறுமைகாத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, இவ்விரு பிரச்சனைகளிலும் ஒரு சமரசத்தைக் கொண்டு வந்தார்.
ஆனால், தீண்டத்தகாதவர்களிடம் மிகவும் நேசப்பூர்வமான அணுகுமுறை கொண்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான பண்டிட் மாளவியாஜி கூட, (இன்றைக்கு பாஜகவினர் தூக்கிப்பிடிக்கும் மதன்மோகன் மாளவியா) பொது இடத்தில் தெருக்கூட்டுபவர் (ஸ்வீப்பர்) ஒருவர் மாலை அணிவித்ததை ஏற்றுக்கொண்டு, பின்னர் குளித்துவிட்டு, தன் துணிகளைத் துவைக்கும் வரை, தான் தீட்டாகிவிட்டதாகக் கருதவில்லையா? சொல்லுக்கும் செயலுக்கும் என்னே முரண்தகை?அனைவரும் கும்பிடுவதற்கான கோவிலில் ஓர் ஏழை புகுந்துவிட்டால் அது கறைபடிந்துவிடுமாம், கடவுளுக்குக் கோபம் வந்துவிடுமாம். இந்து சமூகத்தில் இதுதான் நிலைமை என்றால், இதைவிட நன்றி கெட்டத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. நமக்காக மிகவும் இழிவான வேலைகளை எல்லாம் செய்து நம்மை சௌகரியமாக வைத்திருப்பவர்களை, நாம் ஒதுக்கித் தள்ளுகிறோம். நாம் மிருகங்களைக் கூட கும்பிடுவோம், ஆனால் சக மனிதர்களை நம் அருகே அமர்வதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்.இந்நாட்களில் இது மிகவும் சூடான விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. ...
ஒருவன் ஏழைத் தோட்டியின் வீட்டில் பிறந்துவிட்டான் என்பதற்காகவே, அவன் வாழ்நாள் முழுவதும் கழிப்பறைகளைத்தான் கழுவ வேண்டும் என்றும், வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட வேண்டும் என்பதும் பகுத்தறிவுக்கொவ்வாத பேச்சாகும். வரலாற்றுரீதியாகப் பேசுவோமானால், ஆரியர்கள் இத்தகைய பாகுபாடுகளைக் கொண்டுவந்து, அவர்களை இழிதொழில் புரிவோர் என்று முத்திரை குத்தி, அவர்களை எவரும் தொடக்கூடாது என்று கூறி, அனைத்து இழிதொழில்களையும் அவர்களிடம் சுமத்தினர். அவர்களும் தங்கள் நிலைகண்டு இதற்கெதிராகக் கலகம் செய்ய முன்வந்த நேரத்தில், ‘‘இவை அனைத்தும் நீங்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களுக்கான பலன்கள். இப்போது என்ன செய்ய முடியும்? அனைத்தையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றனர்.
இத்தகைய தூக்கமாத்திரைகளைக் கொடுத்து அவர்களால் சிறிது காலம் அமைதியை வாங்க முடிந்தது. ஆயினும் எந்தவிதத்தில் பார்த்தாலும் இதைப் போன்றதொரு கொடூரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. இதற்குக் கழுவாய் தேடும் காலம் வந்துவிட்டது.விரிவான சமூகக் கண்ணோட்டத்தில் கூறுவதானால், தீண்டாமை என்பது தீங்கு பயக்கக்கூடிய பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகும். பொதுவாக மக்கள், வாழ்க்கைக்கு அடிப்படையான வேலைகளைச் செய்வோரை வெறுக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். நம் மானத்தை மறைக்க நமக்குத் துணி நெய்து கொடுப்போரை நாம் தீண்டத்தகாதவர்களாகக் கருதுகிறோம். உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் சுமப்போர்கூட தீண்டத்தகாதவர்களாவார்கள். உழைப்பின் மேன்மையை - குறிப்பாக மனித உழைப்பை - உதாசீனம் செய்வதன்மூலம் நம் முன்னேற்றத்திற்கே நாம் கடும் சேதத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உழைப்போரைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதுவதையோ அல்லது அழைப்பதையோ நாம் கைவிட வேண்டும்.
இது தொடர்பாக நவஜீவன் பாரத் சபாவிலும், இளைஞர் மாநாட்டிலும் நாம் ஓர் செயல்திட்டத்தை உருவாக்கினோம். அதன்படி அதுநாள்வரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்திருந்த நம் சொந்தச் சகோதரர்களிடமிருந்தே அவர்கள் கைகளின் மூலமாகவே உணவு / தண்ணீர் முதலானவைகளைப் பெற ஏற்பாடு செய்தோம். இவ்வாறு செய்யாமல், சமூகத்தில் கண்ணியமான இடத்தை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை வென்றெடுப்பது குறித்து நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொண்டிருப்பது என்பது வீணேயாகும். இவ்வாறு நாம் மனிதர்கள் மத்தியில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு கிராமங்களுக்குச் சென்ற அந்தக் கணமே, ‘‘நமது முயற்சிகள், உயர்சாதியினருக்குச் சேவகம் செய்துவந்த இழிசாதியினரை அவ்வாறு சேவகம் செய்யவிடாமல் தடுத்திடும்’’ என்று அரசாங்க ஏஜெண்டுகள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள். இது சரியான திசைவழியில் அடி எடுத்து வைத்த ஜாட் போன்ற உயர்சாதி இனத்தவரை நமக்கு எதிராக ஆத்திரமடையச் செய்திடப் போதுமானதாக இருந்தது.தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள், தாங்கள் ஒன்றுபட்டு, ஸ்தாபனரீதியாகத் திரளாத வரை, தங்கள் பிரச்சனைகளைத் திருப்திகரமான முறையில் தீர்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் சமீபத்தில் தங்கள் தனித்துவ அடையாளத்திற்காக ஒன்றுபட்டு நிற்பதும், மக்கள் தொகை எண்ணிக்கையின்படி முஸ்லீம்களுக்கு இணையாகப் பிரதிநிதித்துவம் கோரி இருப்பதும் அவர்கள் சரியான திசைவழியில் எடுத்து வைத்த அடிகளாகும். கொள்கையளவில், சட்டமன்ற மேலவைகளும், பேரவைகளும் அனைத்து இன மக்களும் பள்ளிகள், கல்லூரிகள், கிணறுகள் மற்றும் சாலைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிட அனுமதிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திடுவதற்குக் கடமைப்பட்டவைகளாகும்.
அதுவும் இதனை ஏட்டில் எழுதி வைத்தால் மட்டும் போதாது, செயலிலும் காட்ட வேண்டும். தீண்டத்தகாதவர்களை கிணறுகள், பள்ளிகள் முதலான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை அனுமதித்திட வேண்டும். எனவேதான், ‘‘எழுங்கள் தோழர்களே! தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட, வாழ்க்கையின் உண்மையான உழைப்பாளிகளே, அவமானகரமான கடந்த காலத்தை விட்டு வெளியேறுங்கள், குரு கோவிந்த் சிங் ராணுவத்தின் பின்புலம் நீங்கள்தான். சிவாஜி அனைத்தையும் சாதிக்க முடிந்ததற்கு உங்கள் பங்களிப்புதான் காரணம். நீங்கள்தான் வரலாற்றில் அவரை என்றென்றுமாய் பிரகாசிக்கச் செய்திருக்கிறீர்கள். உங்கள் தியாகங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியவைகளாகும். எங்களுக்காக நீங்கள் அளித்திட்ட உழைப்பு அதன்மூலம் எங்களுடைய வசதியான வாழ்க்கை - இவை அனைத்தும் உங்கள் மீது மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றன.
இதுநாள் வரை உங்களைப் பாராட்டத் தவறிவிட்டோம்,’’ என்று உரக்கவே பிரகடனம் செய்கின்றோம். உண்மையில் சொல்லப்போனால், முதலாளித்துவ அதிகாரவர்க்கக் கூட்டணிதான் உங்களது ஒடுக்குமுறைக்கும் வறுமைக்கும் முக்கிய பொறுப்பாகும். எனவே எப்போதும் அவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். அதன் சூழ்ச்சிகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருங்கள். இது ஒன்றே விடுதலை பெறும் வழியாகும். நீங்கள்தான் உண்மையான தொழிலாளர் வர்க்கம். தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள் - நீங்கள் இழக்கப்போவது எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர. இப்போதுள்ள முதலாளித்துவ ஆட்சி அமைப்புக்கு எதிராகக் கலகம் செய்திட, எழுங்கள். படிப்படியாக என்பதோ அல்லது சீர்திருத்தமோ உங்களுக்குப் பயன் அளிக்கப் போவதில்லை. சமூகக் கிளர்ச்சியிலிருந்து புரட்சியைத் தொடங்குங்கள். அரசியல் மற்றும் பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராகுங்கள்.நீங்கள்தான், நீங்கள் மட்டுமேதான் நாட்டின் தூண்கள் மற்றும் அதன் உள்ளீடான வலிமையாகும். ஓ, உறங்கும் அரிமாக்களே, எழுங்கள், கிளர்ச்சி செய்யுங்கள், புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடித்திடுங்கள்.
நன்றி தீக்கதிர் 23.03.2016 - தமிழில்: ச.வீரமணி




கருத்துகள் இல்லை: